டெல்லி :அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு மொரிசியஸ் நிறுவனங்கள், கடந்த 10 ஆண்டுகளாக இந்திய வரித்துறை ஆணையத்தின் விசாரணை வளையத்தில் உள்ளதாகவும், அந்த இரண்டு நிறுவனங்கள் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.
அமெரிக்கா வர்த்தகம் மற்றும் தடயவியல் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி மாதம் அதானி குழுமம் வரி ஏய்ப்பு, செயற்கை முறையில் பங்குகளின் மதிப்பை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதானி குழுமத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் வீழ்ச்சி அடைந்தன. அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிந்தன. மேலும் அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழிப்பின.
மேலும், அதானி குழுமம் முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. பங்குச் சந்தையில் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதா எனக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, இந்திய பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தணை ஆணையமான செபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சாப்ரே தலைமையில் 6 சிறப்பு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இதனிடையே ஹிண்டன்பர்க் ஆய்வு குறித்து விசாரிக்க 6 மாதங்கள் அவகாசம் கோரி அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் செபி முறையிட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யக் கோரி உத்தரவிட்டது.