ஹூப்ளி: கர்நாடகாவுக்கு யாருடைய ஆசீர்வாதமும் தேவையில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்ட மன்றத்திற்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி, ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடகத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு 3 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் ஆட்சியைத் தக்கவைக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜகவும், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.
பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் மேல்மட்ட தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கர்நாடகா சென்று உள்ள பிரதமர் மோடி, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரோடு ஷோ மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
மறுபுறம் காங்கிரஸ் தரப்பில் ஹூப்ளி நகரில் பிரம்மாண்ட் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
மேலும், பாஜகவின் கொள்ளை, பொய், அகங்காரம், வெறுப்பு போன்ற சூழலை முடிவுக்குக் கொண்டு வராமல் கர்நாடகாவோ, இந்தியாவோ முன்னேற முடியாது என்று சோனியா காந்தி கூறினார். மாநிலத்தில் பாஜக வெற்றி பெறாவிட்டால் கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடியின் ஆசி கிடைக்காது என்றும் கலவரம் வெடிக்கும் என்றும் பாஜக தலைவர்கள் வெளிப்படையாக மிரட்டுவதாக சோனியா காந்தி தெரிவித்தார்.
கர்நாடக மக்கள் யாருடைய ஆசீர்வாதத்தையும் நம்பி இருக்கவில்லை என்றும் மக்கள் அவர்களின் சொந்த உழைப்பையே நம்பி இருக்கிறார்கள் என்பதை பாஜகவுக்கு தான் சொல்ல விரும்புவதாக கூறினார். கர்நாடக மக்கள், தாங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை வரும் மே 10 ஆம் தேதி புரியவைப்பார்கள் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
பொதுவாக கர்நாடகா காங்கிரசின் காந்தி குடும்பத்துடன் நீண்ட தொடர்பைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிப் பாதைக்கு வித்திட்ட மாநிலங்களி ஒன்றாக கர்நாடகா இருப்பதாக கருதப்படுகிறது. மறு அரசியல் பிரவேசத்திற்காக காத்து இருந்த இந்திரா காந்தி, கட்ந்த 1978 ஆம் கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
அதேபோல் சோனியா காந்தியும் தனது முதல் தேர்தலில் பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வருகிறது. தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவினால் தென் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத சூழல் உருவாகும். அதுவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க :ராகுல் காந்தி சர்ப்ரைஸ் விசிட் - மாணவர்களுடன் சாப்பிட்டவாறு கலந்துரையாடல்..!