டெல்லி:'மோடி' என்ற பெயரை விமர்சித்தது தொடர்பான அவதூறு வழக்கில், ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி முறையீடு செய்த நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கில், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, கடந்த 4ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க போதுமான முகாந்திரங்களை கீழமை நீதிமன்றம் கூறவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சியினர் மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றனர். சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், ராகுல்காந்தியின் எம்பி பதவியை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 5) மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடிதம் வழங்கி வலியுறுத்தினர்.
ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இரண்டு நாட்கள் ஆகியும், ராகுல் காந்தியை மீண்டும் எம்பி பதவியில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ராகுல்காந்திக்கு உடனடியாக எம்பி பதவியை கொடுக்காமல் தாமதிக்க மத்திய பாஜக அரசு திட்டமிடுவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வரும் 8ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதம் நடைபெறவுள்ளதால், ராகுல்காந்தியை அதில் கலந்து கொள்ளவிடாமல் தடுப்பதற்காகவே இந்த தாமதம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான அபிஷேக் மனு சிங்வி, "எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பது போலவே, ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை உள்ளது.