மகாராஷ்ட்ரா:சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நேற்று(செப்டம்பர் 2) நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதில், "தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப்போம். சிறப்புரை ஆற்ற எனக்கு வாய்ப்பளித்த இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று இல்லாமல், சனாதன ஒழிப்பு மாநாடு என்று பெயரை வைத்துள்ளீர்கள், பாராட்டுகிறேன். சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். டெங்கு, மலேரியா, கரோனா போன்றவற்றை எதிர்க்க முடியாது, அவற்றை ஒழிக்க வேண்டும். அதேபோல் சனாதனத்தை எதிர்ப்பதை விட அதனை ஒழிக்க வேண்டும். சனாதனம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இது சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கு எதிரானது" என்று கூறினார்.
சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டிச் செல்வத்தைக் குவிப்பதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் ஒரே நோக்கம். உதயநிதி ஸ்டாலின் அவர்களே நீங்கள், உங்கள் தந்தை அல்லது உங்கள் லட்சியவாதிகளான கிறிஸ்தவ மிஷனரிகளுடைய கொள்கையைக் கொண்டுள்ளீர்கள். அந்த மிஷனரிகளின் எண்ணம், உங்களைப் போன்றவர்கள் மூலமாக தங்களது தீய சித்தாந்தத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான். தமிழ்நாடு ஆன்மிக பூமி. உங்களால் இதுபோன்ற நிகழ்வில் மைக்கைப் பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்த மட்டுமே முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியாவும் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மாள்வியா, "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், திமுக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை மலேரியா மற்றும் டெங்குவுடன் ஒப்பிட்டுள்ளார், அதை எதிர்க்கக்கூடாது ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால், நாட்டில் சனாதன தர்மத்தைப் பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் திமுக முக்கிய உறுப்பினராகவும், காங்கிரசுடன் நீண்ட கால நட்புறவிலும் உள்ளது. உதயநிதியின் இந்த கருத்துதான் மும்பை சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதா?" என்று குறிப்பிட்டுள்ளார். உதயநிதியின் கருத்தை வைத்து இந்தியா கூட்டணியை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று(செப்டம்பர் 3) செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்ட்ரா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் நானா படோல், "எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காங்கிரஸ் கட்சி யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவதையோ, விமர்சிப்பதையோ விரும்பவில்லை. அதேபோல் வேறு ஒருவருடைய கருத்துக்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பாஜகவினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், காங்கிரஸ் கட்சியினர் இந்த விவகாரத்தில் இருந்து விலகி நிற்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: "சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!