பெங்களூரு : 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இன்று (மே. 13) வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 136 இடங்களிலும், பாஜக 62 இடங்களிலும் வெற்றி பெற்றன. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்நிலையில் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த வெற்றிபெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களையும் நாளை (மே. 14) பெங்களூரு வருமாறு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோரிடையே முதலமைச்சர் பதவிக்கான போட்டி நிலவுகிறது.
இருவரின் பெயரும் காங்கிரஸ் முதலமைச்சர் பதவிக்கான ரேஸில் உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என சொல்லப்படுகிறது. முன்னதாக மக்களின் பேராதரவுடன் தனது தந்தை சித்தராமையா முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என அவரது மகன் யாதிந்திரா தெரிவித்துள்ளார்.
இதற்கு உடனடியாக பதில் கொடுத்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு தான் செய்யும் என்று கூறினார். முன்னதாக மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா 130க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என கணித்தது நிறைவேறி இருப்பதாகக் கூறினார்.