பெங்களூரு :224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகா சட்டப் பேரவையை தக்க வைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரசும் போராடி வருகின்றன. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே இருப்பதால் ஆளும் பாஜக, எதிர்க் கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.
வேட்பாளர் தேர்வில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் ஒருவரை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். மறுபுறம் பல்வேறு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், கர்நாடக சட்டப் பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் பணிக் குழு தலைவராக பி.என். சந்திரப்பா நியமிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பணிக் குழு தலைவராக பி.என். சந்திரப்பாவை நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.