பெங்களூரு:கர்நாடக மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தலையொட்டி தீவிரமாக பரப்புரை செய்து வரும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
அம்மாநில முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. அந்த வகையில், தேர்தலுக்கு கிட்டத்தட்ட 1 மாதம் மட்டுமே இருக்கிறது. இதனால் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. சொல்லப்போனால், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 மாதங்களில் கர்நாடக மாநிலத்துக்கு 2 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த மாதமும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க கர்நாடகா வருகிறார். அதோபோல காங்கிரஸ் கட்சியும் பல்வேறு பகுதிகளில் பொது கூட்டங்களை நடத்தி பரப்புரையை தொடங்கி விட்டது. இந்த பரப்புரையில் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்த தலைவிக்கு மாதந்தோறும் ரூ. 2,000 ரொக்கம், ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று (மார்ச் 20) கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்று மேலும் ஒரு வாக்குறுதி அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காமில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (மார்ச் 20) இளைஞர் புரட்சி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, ராகுல் காந்தி கூறுகையில், கர்நாடகவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இளைஞர் நலத்திட்டத்தின் மூலம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு ரூ. 1,500 உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை படித்து முடித்தப் பின்பு முதல் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். குறிப்பாக ஒரு வருடத்தில் அரசு வேலை வழங்கப்படும். என்று வாக்குறுதி அளித்துள்ளது. இந்த வாக்குறுதி படித்து வரும் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல பாஜகவும் பல்வேறு நலத்திட்ட வாக்குறுதிகளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:ரூ.1000 உரிமைத்தொகை அனைவருக்கும் கிடையாது.. டிடிவி தினகரன் விமர்சனம்..