டெல்லி:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி இன்று (நவம்பர் 21) தெரிவித்தார். இதுகுறித்து சிங்வி கூறுகையில், "இந்த முடிவு காங்கிரஸ் கட்சியின் கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். இந்த தீர்ப்பில் மத்திய அரசும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் காங்கிரஸ் தலையிடலாமா வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 26 பேருக்கு 1998ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணையின் முடிவில் சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2000ஆம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதேபோல 2014ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.