பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் ஜுன் 11ஆம் தேதி நாடுதழுவிய மிகப்பெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களும், அதன் விலையைக் குறைக்கக்கோரி, ஒன்றிய அரசை வலியுறுத்தி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் போராட்டமும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெரியளவில் எரிபொருள் விலையில் மாற்றம் இல்லாத நிலையில், தேர்தலுக்குப் பின் அதன் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வருவதாக ஆளும் பாஜக கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக எண்ணை விற்பனை நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வரும் நிலையில், நேற்று(ஜுன் 8) நாட்டின் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.95.31க்கும்,டீசல் ரூ.86.22க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி, கடந்த மே 29ஆம் தேதி நாட்டிலேயே முதல்முறையாக மும்பையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.100-ஐ தாண்டி விற்கப்பட்டது. அதேபோல், நேற்றைய நிலவரப்படி, மும்பையில், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.101.53க்கும், டீசல் ரூ.93.57க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தச் சூழலில், பெட்ரோல், விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து வரும் 11ஆம் தேதி நாடு தழுவிய அளவில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திரா பாண்டே நியமனம்!