டெல்லி:வயது மூப்பு, பல்வேறு நோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதியுற்ற கல்யாண் சிங்குக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டுவந்த நிலையில், ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று காலமானார். இவர் உத்தரப் பிரதேச முதலமைச்சராகவும், ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர். அயோத்தி ராம ஜென்ம பூமி போராட்டம் வலுப்பெற்றபோது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இவர்தான் இருந்தார்.
இந்தியக் கொடியின் மீது கட்சி கொடியை வைப்பது சரியா
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சேவகராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கல்யாண் சிங்கின் பேச்சு, பாபர் மசூதி விவகாரத்தில் பிரிந்திருந்த கரசேவகர்களை ஒன்றிணைத்தது. 1991ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 221 இடங்களைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கல்யாண் சிங் மறைவின்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் காங்கிரசின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஸ்ரீனிவாஸ். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், மறைந்த கல்யாண் சிங்கின் உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டுள்ளது. அதன் பாதிக்குக் கீழ் பாஜக கொடி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பதிவில் ஸ்ரீனிவாஸ், 'புதிய இந்தியாவில் இந்தியக் கொடியின் மீது கட்சி கொடியை வைப்பது சரியா' எனக் கேள்வியெழுப்பியுள்ளார். தனது மற்றொரு பதிவில், இது பாரதப் பிரதமரால் வலியுறுத்தப்பட்டதா எனவும் வினா தொடுத்துள்ளார்.