புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தனர்.
அதைத் தொடர்ந்து ஏனாம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் சுகாதாரத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் நேற்று தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
ஜான் குமாரின் ராஜினாமா கடிதம் தற்போது காமராஜ் நகர் எம்எல்ஏ ஜான் குமார், சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இவர் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடுவதற்காக 2016இல் நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக்கொடுத்தவர்.
காங்கிரஸ் VS எதிர்க்கட்சி:
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஏற்கனவே மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் இவரும் ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் எம்எல்ஏ ஜான்குமார் ராஜினாமா புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணியின் பலம் 19 ஆக இருந்தது. இதில் முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தனவேலுவின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் 18 ஆனது.
இந்த நிலையில், நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார், ஆகியோரின் ராஜினாமாவால் கூட்டணியின் பலம் 14ஆக சரிந்துள்ளது.
அம்மாநில சட்டப்பேரவையில் என்.ஆர். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் அதிமுக 4 தொகுதிகளிலும் என எதிர்க்கட்சிகளின் பலம் மொத்தம் 11 என்ற நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.