இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரங்க தொழிலதிபரும், காங்கிரஸ் பிரமுகர் விஜேந்திரசிங் சவுகானின் சகோதரருமான ஜிதேந்திர சிங் சவுகானின் 6 வயது மகன் ஹர்ஷ் சிங் சவுகான், நேற்று(பிப்.5) வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவன் திடீரென காணாமல் போனதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனை பல இடங்களில் தேடினர். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து விஜேந்திரசிங் சவுகானுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், தாங்கள் சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவனை விடுவிக்க வேண்டுமெனில் 4 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதையடுத்து சிறுவனின் குடும்பத்தார் போலீசில் தகவல் தெரிவித்தனர்.
இதுதொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், பர்வா வனப்பகுதியிலிருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் உடலை போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தல்காரர்களை கண்டுபிடித்தனர். அதன்படி, சிறுவனை கடத்தியதாக இருவரை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னை காரணமாக ஜிதேந்திர சிங்கின் உறவினர்களே சிறுவனை கடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால், கொலைக்கான காரணம் குறித்து முழு விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது