சிம்லா (இமாச்சலப்பிரதேசம்): இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12 அன்று நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 76.44 சதவீத வாக்குகள் பதிவாகின. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.8) காலை தொடங்கி எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் 68 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியது.
அதேபோல் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 53 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த நிலையில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்று ஆளும் பாஜகவை தோற்கடித்துள்ளது. பாஜக 25 இடங்களில் வெற்றி அடைந்துள்ளது.
அதேபோல் மூன்று சுயேச்சை வேட்பாளார்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட தனது வெற்றியைப் பதிவு செய்யவில்லை. இமாச்சலில் ஆட்சி அமைக்க 35 பேர் பெரும்பான்மை தேவை என்கிற நிலையில், காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்று இமாச்சலில் ஆட்சியைப் பிடிக்கிறது.
அதேநேரம், இங்கு பாஜகவைச் சேர்ந்த ஜெய் ராம் தாகூர் செராஜ் தொகுதியில் வெற்றி அடைந்த நிலையிலும், ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பதால் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுக் ராமின் மகன் அனில் சர்மா, காங்கிரஸின் போட்டியாளரைத் தோற்கடித்து, தனது மண்டி சதர் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்.
டெஹ்ராவைச் சேர்ந்த ஹோஷியார் சிங் மற்றும் நலகர் தொகுதியில் இருந்து கே.எல்.தாகூர் ஆகியோர் வெற்றி பெற்ற 3 சுயேச்சைகளில் அடங்குவர். இமாச்சலப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மகனும், சிம்லா (கிராமப்புற) காங்கிரஸ் எம்எல்ஏவுமான விக்ரமாதித்ய சிங், பாஜகவின் ரவிக்குமார் மேத்தாவை 13,860 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும், சிட்டிங் எம்.எல்.ஏவுமான ஆஷா குமாரி டல்ஹவுசியிலும், காங்கிரஸின் கவுல் சிங் தராங்கிலும் பின்தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இமாச்சலப்பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, “மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் காங்கிரஸ் மகிழ்ச்சி அடைகிறது. 10 தேர்தல் உத்தரவாதங்களை நிறைவேற்ற அனைத்தையும் செய்வோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சண்டிகரில் வைத்து புதிய சட்டமன்ற கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முடிவு செய்வார்கள்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, மக்கள் மத்தியில் மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க:இமாச்சலப்பிரதேசத்தில் தவிடு பொடியான பிரதமர் மோடியின் யுக்தி