ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள 29 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்து உள்ளது.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவைப்படும் நிலையில், மீண்டும் ஆட்சியை தக்கவைக்க அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் அசோக் கெலாட், மூத்த தலைவர் சச்சின் பைலட் ஆகியோரிடையே நிலவும் பிரச்னை மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வர தடையாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இரு தலைவர்களையும் அழைத்து பேசி காங்கிரஸ் கட்சி சமாதானப்படுத்தியது.
இதையடுத்து கட்சித் தலைமையின் அறிவுரையை ஏற்று இரு தலைவர்களும் சமாதானம் செய்து கொண்டதாகவும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் இரு தலைவர்களும் கூட்டாக இணைந்து கட்சியின் வெற்றிக்கு உழைக்க ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், தேர்தல் யுக்திகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மாநிலத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும், மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் 29 பேர் கொண்ட காங்கிரஸ் தேர்தல் பணிக் குழுவுக்கு கட்சி தலைமை அனுமதி அளித்து உள்ளது. இந்த தேர்தல் பணிக் குழுவில் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் அங்கம் வகிக்கின்றனர்.
இது தொடர்பான உறுப்பினர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. அதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பன்வர் ஜித்தேந்திரா, ரகுவீர் மீனா, காங்கிரச் செய்தி தொடர்பாளர் மோகன் பிரகாஷ், குஜராத் மாநில பொறுப்பாளர் ரகு சர்மா, பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி, மாநிலங்களவை உறுப்பினர் நீரஜ் தாங்கி உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்று உள்ளனர்.
இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ள அனைவரும் கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் யுக்தி கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தொகுதி வாரியாக வேட்பாளர்கள் நியமனம், பிரசாரம் உள்ளிட்ட பணிகளை இந்த குழுவினர் கண்காணிப்பாளர்கள் என கூறப்பட்டு உள்ளது. நடப்பாண்டு இறுதியில் மாநில சட்டப் பேரவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி வருகிறது.
இதையும் படிங்க :மணிப்பூர் பழங்குடியின பெண்கள் விவகாரம்... முக்கிய குற்றவாளி கைது - போலீசார் தகவல்!