ஷாஜகான்பூர் : உத்தரபிரதேசத்தில் 18 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி கணினி ஆசிரியர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேசம் மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் 50 மாணவிகள் உள்பட 115 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் பள்ளியில் மாணவர்களின் வருகை குறைந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண் மாணவிகள் பள்ளிக்கு வருவதை படிப்படியாக நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.
பள்ளிக்கு மாணவர்கள் வருகை 35 சதவீதமாக குறைந்ததை அடுத்து இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு, கணினி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. கணினி ஆசிரியரால் ஏறத்தாழ 18 மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அதில் மிரண்டு போன மாணவிகள் பள்ளிக்கு வருவதை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூற பயந்து போய் பள்ளிக்கு வருவதையே முற்றிலுமாக தவிர்த்ததாக சொல்லப்படுகிறது. இந்த உண்மை கடந்த 13 ஆம் தேதி மாணவிகளின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், கிராம மக்கள் அனைவரும் பள்ளியில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.