இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பருக்குள் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தொற்று பாதிப்பும் குறைந்து வருவதால் பல மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. பெரும்பாலான மாநில அரசுகள் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மீண்டும் இயங்க அனுமதி அளித்தன.
இந்நிலையில், பஞ்சாப் மாநில அரசு தங்கள் அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அம்மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் செப்டெம்பர் 15ஆம் தேதிக்குள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது கட்டாயம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.