புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான சைக்கிள் கடந்த அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. இவை தரமற்றவை என புகார் கூறி துருப்பிடித்த சைக்கிள்களைச் சட்டசபைக்கு எடுத்துவந்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் செல்வத்திடம் சைக்கிள்களைக் காண்பித்து புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் சட்டசபையில் இருந்த முதலமைச்சர் ரங்கசாமியையும் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
இதையும் படிங்க:லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரிக்கு சிறையில் முதல் வகுப்பு! நீதிமன்றம் உத்தரவு!
அந்த மனுவில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச சைக்கிள், வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மொத்தம் 9 ஆயிரத்து 390 மாணவர்களுக்குச் சைக்கிள் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியில் ரூ.5 ஆயிரம் அளவில் தரமான சைக்கிள் வழங்கியிருக்கலாம். ஆனால் 12 ஆயிரம் தரமற்ற சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளது. சைக்கிள் வழங்கும் போதே துருப்பிடித்தும், உடைந்தும் உள்ளன. பஞ்சாபைச் சேர்ந்த நிறுவனம் இந்த தரமற்ற சைக்கிளை வழங்கியுள்ளது.