புது டெல்லி: ட்விட்டர் இந்தியா தளத்தின் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரி, ட்விட்டர் தளத்தின் கொள்கை இயக்குநர் ஷகுனா கம்ரான், ’ரிபப்ளிக் ஏதிஸ்ட்’ எனும் பக்கத்தைத் தொடங்கியவரும், முதன்மை செயல் அலுவலருமான சுசானா மசிண்டயர் ஆகியோர் மீது மத வெறுப்பை பரப்புவதாகக் கூறி டெல்லி சைபர் பிரிவு காவல் துறையில் வழக்குரைஞர் ஆதித்யா சிங் தேஷ்பால் என்பவர் புகார் அளித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ’காளி’ படம்
‘ரிபப்ளிக் ஏதிஸ்ட்’ பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பகிரப்பட்டுள்ள காளி கடவுளின் படம் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ள வழக்குரைஞர், தங்கள் மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் மட்டும் அப்படம் இல்லாமல், சமூகத்தில் பகை, வெறுப்பை பரப்பி, இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
’ஏதிஸ்ட் ரிபப்ளிக்’ எனும் மைக்ரோ பிளாகிங் தளத்தின் இந்தப் புகைப்படம், 2011ஆம் ஆண்டு முதலே ட்விட்டரில் இருந்து வருவதாகவும், இந்து மதம் உள்ளிட்ட பிற மதங்களின் மீதும் அவதூறு பரப்பும் இது போன்ற அத்தளத்தில் உள்ள படங்களை அகற்றாமல், இந்திய சட்ட விதிமுறைகளை ட்விட்டர் தளம் மீறி வருகிறது எனவும் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.