தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அல்லாஹூ அக்பர்' கூறிய மாணவிக்கு பரிசுத்தொகை: வலதுசாரி இயக்கம் புகார் - கர்நாடக உயர் நீதிமன்றம்

'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டு தன்னை அச்சுறுத்திய கும்பலை 'அல்லாஹூ அக்பர்' என்று எதிர்முழக்கமிட்டு எதிர்த்து நின்ற மாணவிக்கு ஓர் அமைப்பு ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவித்திருந்த நிலையில், அதை எதிர்த்து நரேந்திர மோடி விசார் மஞ்ச் அமைப்பு காவல் துறையில் புகார் கொடுத்துள்ளது.

Allah hu Akbar, Karnataka Hijab girl video, Muskaan Khan,
மாணவி முஸ்கான் கான்

By

Published : Feb 11, 2022, 10:33 AM IST

மாண்டியா:கர்நாடகாவில் ஹிஜாப் - காவி துண்டு சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் மூன்று நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாநில பாஜக அரசு விடுமுறை அளித்துள்ளது.

தலைநகர் பெங்களூருவில் ஹிஜாப்-காவி துண்டு தொடர்பான போராட்டங்களைத் தவிர்க்க, பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சுற்றி 200 மீட்டருக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை கர்நாடகாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும்பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

'அல்லாஹு அக்பர்' விவகாரம்

இந்தப் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக, மாண்டியா மாவட்டத்தில் உள்ள பிஇஎஸ் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பயிலும் முஸ்கான் கான் என்ற இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்துகொண்டு கல்லூரிக்கு வந்தார். அப்போது, கல்லூரி வளாகத்தில் இருந்த கும்பல் ஒன்று, 'ஜெய் ஸ்ரீராம்' என்று கூச்சலிட்டு அம்மாணவியை சூழ்ந்து அச்சுறுத்தியது.

மாணவி முஸ்கான் கான்

ஆனால், அந்த அச்சுறுத்தலுக்குப் பதிலடியாக முஸ்கான் கான், 'அல்லாஹு அக்பர்' என முழக்கமிட்டார்.

முஸ்கான் கான் முழுக்கமிட்ட காணொலி வேகமாகப் பரவிய நிலையில், நாடு முழுவதும் இருந்து அம்மாணவிக்கு ஆதரவுக்கரம் நீண்டது. மேலும், அம்மாணவியின் துணிச்சலான செயலுக்கு பாராட்டும் குவிந்தது.

ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை

இதன் ஒரு பகுதியாக, ஜாமியத் உலிமா-இ-ஹிந்த் எனும் அமைப்பு, உரிமைக்காக தைரியமாக குரல் கொடுத்த மாணவி முஸ்கான் கானுக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசை அளிப்பதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த முஸ்கான் கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரொக்கப்பரிசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நரேந்திர மோடி விசார் மஞ்ச் எனும் அமைப்பு மாண்டியா காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

அந்த அமைப்பின் செயலாளர் சி.டி. மஞ்சுநாத் கூறுகையில்,"கர்நாடக மத சகிப்புத்தன்மையை நீக்கி மாணவர்களின் மனதில் விஷ விதைகளை விதைத்திருப்பது கவலை அளிக்கிறது. சில அடிப்படைவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் மாணவிக்கு (முஸ்கான் கான்) பரிசுத்தொகை அறிவிப்பது என்பது மிகவும் மோசமானது.

திறக்கவிருக்கும் பள்ளிகள்

இந்த ஹிஜாப் சர்ச்சைக்குப் பின், இந்த அமைப்புதான் மறைந்திருக்கும். இந்த அமைப்பின் பண பரிவர்த்தனை ஆராயப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்று பரிசுத்தொகை, அடிப்படைவாதத்தையும், மதவெறியையும் ஊக்கவிக்க வழிவகுக்கும்" என்றார்.

தற்போது, ஹிஜாப் சர்ச்சை தொடர்பான வழக்குகளை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்திவருகிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும்வரை மாணவர்கள் ஹிஜாபோ அல்லது காவித்துண்டோ அல்லது மத சின்னங்களை அறிவிக்கும் வகையிலான உடைகளையோ தவிர்த்து பள்ளி/கல்லூரி சீருடையில்தான் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது, கர்நாடக உயர் நீதிமன்றம்.

மாணவி அறிவிப்பு

மேலும், பள்ளி, கல்லூரிகளை அரசு திறக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், வரும் திங்கட்கிழமை (பிப். 14) முதல் 8, 9, 10ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

பிற வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து, சூழலை ஆராய்ந்த பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், கும்பலை நோக்கி 'அல்லாஹூ அக்பர்' என முழக்கமிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாணவி முஸ்கான் கான், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Hijab Issue: பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றது' - இந்தியா கடும் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details