டெல்லி : ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைப்பு சந்தையில் போட்டி ஆதிகத்தை உருவாக்கும் என்பதால் ஏன் அது குறித்து விசாரணை நடத்தக் கூடாது என்று அறிக்கை அளிக்குமாறு டாடா குழுமத்திற்கு இந்திய போட்டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடனில் சிக்கி தவித்து வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் வாங்கியது. ஏர் இந்தியாவை வாங்கிய டாடா குழுமம், ஏற்கனவே விஸ்தாரா என்ற விமான சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறது. அதில் 49 சதவீத பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வைத்து உள்ள நிலையில், விஸ்தாராவின் 51 சதவீத பங்குகளை டாடா வைத்துள்ளது.
இதனிடையே ஏர் இந்தியாவுடன், விஸ்தாராவை இணைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன்படி 2024ஆம் ஆண்டுக்குள் இரு நிறுவனங்களும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்திலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 25 புள்ளி 1 சதவீத பங்குகளை வைத்து உள்ளது.