ராஞ்சி (ஜார்கண்ட்): ராஞ்சியில் உள்ள தலதாலி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுபாஷ் முண்டா (Subash Munda) நேற்று (ஜூலை 26) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராஞ்சி எஸ்எஸ்பி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ராஞ்சி எஸ்எஸ்பி கிஷோர் கவுஷல் கூறுகையில், “சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைத்து கோணங்களிலும் அனைத்து மட்டங்களிலும் வழக்கை விசாரித்து வருகிறோம். இந்த வழக்கை விரைவில் தீர்ப்போம்” என தெரிவித்தார்.
ராஞ்சி சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜேஷ்வர் நாத் அலோக் கூறுகையில், “சுபாஷ் முண்டா கொலைக்குப் பிறகு, ஏற்பட்ட போராட்டத்தின்போது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களிடம் பேசி வருகிறோம். குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் அப்பகுதி தலைவராக இருந்த சுபாஷ் முண்டாவை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாகவும், அதை அடுத்து வன்முறை ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தலதாலி சௌக் பகுதியில் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் சுபாஷ் முண்டா அவரது அலுவலகத்தில் இருந்தபோது நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.