வாஷிங்டன்: இன்டர்நெட் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் கூகுள் நிறுவனம், குஜராத்தில் உள்ள குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி (GIFT) நகரத்தில், தனது குளோபல் ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தை அமைக்க உள்ளதாக, கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமுமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தப் பிறகு தெரிவித்து உள்ளார்.
இந்திய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு, தனது நிறுவனம் சார்பில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி முதலீடு செய்யப்பட உள்ளதாக மேலும் தெரிவித்து உள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI), ஃபின்டெக், சைபர் பாதுகாப்பு உபகரண தயாரிப்புகள் மற்றும் அதன் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பதற்கான கூடுதல் வழிகளை ஆராய, சுந்தர் பிச்சைக்கு அழைப்பு விடுத்து உள்ள பிரதமர் மோடி, இந்தியாவில் மொபைல் சாதன உற்பத்தியை பரிசீலிக்குமாறு சுந்தர் பிச்சையிடம் பரிந்துரைத்து உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக கூகுள் மற்றும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடியும், சுந்தர் பிச்சையும் விவாதித்து உள்ளனர். முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ஆல்பபெட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையை சந்தித்துப் பேசினார்.
அதுமட்டுமல்லாது, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், OPENAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் AMD சிஇஓ லிசா சு உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசி உள்ளார். மேலும் இது குறித்து சுந்தர் பிச்சை கூறியதாவது, "இன்று குஜராத்தில் உள்ள கிப்ட் நகரில் (Gujarat International Finance Tec-City) எங்களது குளோபல் fintech செயல்பாட்டு மையத்தை திறப்பதாக அறிவிக்கின்றோம்.