நொய்டா:உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில், அமோரா மாவட்டத்தைச் சேர்ந்த அனுஜ் சிங்(21) என்ற மாணவர், இளங்கலை சமூகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கான்பூரைச் சேர்ந்த ஸ்னேகா(21) என்ற மாணவியும் அதே வகுப்பில் படித்து வந்தார். இவர்களுக்கு தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், நேற்று(மே.18) இருவரும் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள டைனிங் ஹால் அருகே சந்தித்துப் பேசியுள்ளனர்.
அப்போது, மாணவர் அனுஜ் சிங் திடீரென துப்பாக்கியால் ஸ்னேகாவை சுட்டுவிட்டு அங்கிருந்த தப்பியோடிவிட்டார். ஸ்னேகா சரிந்து கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் இதைக் கண்டதும், உடனடியாக ஸ்னேகாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவியை சுட்டுவிட்டு, விடுதிக்குச் சென்ற மாணவர் அனுஜ் சிங் அறையில் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடந்த கல்லூரி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில், டைனிங் ஹாலுக்கு வெளியே இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பதும், பிறகு வாக்குவாதம் செய்ததும் பதிவாகியிருந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஸ்னேகா அனுஜ் சிங்கை தாக்க முற்படும்போது, அவர் ஸ்னேகாவை கீழே தள்ளிவிட்டு அவரிடமிருந்து எதையே பறிக்க முயற்சிக்கிறார். பிறகு துப்பாக்கியால் ஸ்னேகாவை சுட்டுவிட்டு, கீழே கிடந்த எதையே எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன.