தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சர்வதேச அளவில் ஹிஜாப்...! - அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா அதிர்ச்சி

கர்நாடகத்தில் உள்ள கல்வி மையம் மாணவர்கள் ஹிஜாப் அணிந்துவருவதற்கு அனுமதி மறுத்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து மலாலா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா

By

Published : Feb 9, 2022, 12:51 PM IST

Updated : Feb 9, 2022, 1:38 PM IST

டெல்லி: கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பது குறித்து சமூக நல செயற்பாட்டாளரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசப்சாய் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 8) தனது கவலையை வெளிப்படுத்தினார்.

கர்நாடாக மாநில கல்வி மையங்களில் ஹிஜாபுக்கு அனுமதி மறுப்பது தொடர்பாக, பெண்கள் நலனுக்காக குரல் கொடுத்துவரும் மலாலா கூறுகையில், பள்ளிக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார்.

ஹிஜாப் விவகாரத்தின் தொடக்கப்புள்ளி மாண்டியா

இது குறித்து மலாலா அவரது ட்விட்டர் பதிவில், "படிப்பையும், ஹிஜாபையும் தேர்வுசெய்வது குறித்து கல்லூரி நம்மை வற்புறுத்துகிறது. ஹிஜாப் அணிந்து மாணவிகள் பள்ளி செல்ல மறுப்பது கொடுமையானது.

ஆடை அணிவது தொடர்பாக (ஆடைகளை குறைத்தோ, அதிகரித்தோ அணிவதில்) பெண்கள் தொடர்ந்து புறக்கணிப்புக்கு உள்ளாகிறார்கள். இஸ்லாமியப் பெண்கள் புறக்கணிக்கப்படுவதை இந்தியத் தலைவர்கள் கண்டிப்பாகத் தடுத்து நிறுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தின் பிள்ளையார் சுழி கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரிதான். கடந்த மாதம் (2021 டிசம்பர்) அந்தக் குறிப்பிட்ட கல்லூரியின் நிர்வாகம், மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி இல்லை எனப் புது உத்தரவை பிறப்பித்தது.

தடைவிதித்த அரசு - போராடும் மாணவர்கள்

இதையடுத்து, இஸ்லாமிய மாணவிகள் இந்த உத்தரவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தற்போது இந்திய அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியுள்ளது.

உடுப்பி கல்லூரி மாணவிகள் ஐந்து பேர் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

கல்வி நிலையங்களில் காவி உடைகள், ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு தடைவிதித்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்து வகுப்புகளில் அனுமதிக்க வலியுறுத்திவருகின்றனர்.

மோதல் போக்கை உண்டாக்கும் காணொலி

இதையடுத்து, இந்து மாணவர்களும் காவித்துண்டு அணிந்துவந்து தங்களையும் கல்லூரி நிறுவனங்களில் அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர். இந்த விவகாரம், இரு மத பிரச்சினையாகத் திசைமாறியிருப்பது மாணவர்களிடையே உள்ள சகோதரத்துவத்தைப் பிளவுபடுத்தப்படுவதாக உள்ளதாக சமூக நல விரும்பிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் காணொலி ஒன்று வைரலாகியிருக்கிறது. அதில், ஹிஜாப் அணிந்துவந்த ஒரு மாணவியை காவித்துண்டு அணிந்துவந்த மாணவர்கள் சூழ்ந்து கோஷமிடுவதாக உள்ளது. இந்தக் காணொலி ஒரு மோதல் போக்கை உண்டாக்குவதாக இருப்பது வேதனையான ஒன்று.

சகோதரத்துவமும், தேசிய ஒருமைப்பாடும் தற்போது காலத்தின் கட்டாயம். பிரிவினைவாத சக்திகளின் விஷமத்தனங்களுக்கு ஆட்படாமல் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருந்து ஒற்றுமையைக் கடைப்பிடித்து எதிர்காலத்தில் பண்பட்ட சமுதாயத்தைப் படைக்க உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

இதையும் படிங்க: ஹிஜாப் விவகாரம்: காவிக்கொடி ஏற்றிய மாணவனால் பரபரப்பு!

Last Updated : Feb 9, 2022, 1:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details