புதுச்சேரி: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் 2023ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு புதுச்சேரி, மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள 25 சட்டப்பேரவை தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியல்களை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வல்லவன் வெளியிட்டார்.
இதில் மொத்த வாக்காளர்கள் 8,40,123 பேர் ஆவர். ஆண் வாக்காளர்கள் 3,95,974 பேரும், பெண் வாக்காளர்கள் 4,44,027 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 122 பேரும் அடங்குவர். இதில் புதிய வாக்காளர்களாக 4,722 பேர் பதிவு செய்து சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இறுதி வாக்காளர் பட்டியல் இன்று முதல் வருகிற 13ஆம் தேதி வரை அந்தந்த தொகுதி வாக்குச்சாவடிகளில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும், வாக்காளர்கள் தங்களின் பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.
ஏப்.1, ஜூலை.1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வல்லவன், இன்று (ஜன.05) முதல் புதுச்சேரி மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படும். பேனர் அகற்றுவது தொடர்பாக தடை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் பேனர்களை அகற்றும்.
அதனையும் மீறி அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலைவர்களின் சிலைகளை மறைத்தும், சாலையோரங்களிலும் பேனர் வைக்கப்படுகின்றது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு. என்னுடைய மொபைல் போனுக்கும் போட்டோவுடன் காமராஜர் சிலையைக் காணவில்லை என வந்ததாகவும் இனி அத்துமீறி பேனர் வைப்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் - ஆளுநரால் வெடித்த சர்ச்சை