துர்காபூர் : மேற்கு வங்கத்தில் நிலக்கரி கடத்தல் மன்னனாக விளங்கிய பாஜக பிரமுகர் ராஜேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துர்காபூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்கிற ராஜூ ஜா, நிலக்கரி கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதத் தொழில்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டுக்கு முன் வரை கடத்தல் தொழிலில் கொடி கட்டி பறந்த வந்த ராஜேஷ், மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி நிறைவு பெற்று புதிய ஆட்சி தொடங்கியது முதல் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு வழக்குகளில் ராஜேஷ் சிறை சென்று வந்து உள்ளார்.
இந்நிலையில், தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்ட ராஜேஷ் தொடர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்து உள்ளார். கடந்த சட்டமன்றத்தேர்தலில் கூட பாஜக சார்பில், தேசியத் தலைவர்களுடன் இணைந்து ராஜேஷ் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஹோட்டல், போக்குவரத்து, உள்ளிட்ட பல்வேறு தொழில்களை ராஜேஷ் செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, துர்காபூர் நகர மையத்தில் உள்ள ராஜேஷிவின் போக்குவரத்து அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கொல்கத்தா நோக்கி ராஜேஷ் காரில் பயணித்து கொண்டு இருந்த நிலையில், அவரது எதிர்திசையில் வந்து மற்றொரு கார் மறித்து உள்ளது.
எதிர்திசையில் வந்த காரில் இருந்த மர்ம நபர்கள் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் ராஜேஷூடன் காரில் பயணித்த மற்றொரு நபரான பிராடின் பேனர்ஜி அதிர்ஷ்டவசமாக குண்டடி காயங்களுடன் உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், ராஜேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் குண்டடி காயங்களுடன் உயிர் தப்பிய பிராடின் பேனர்ஜி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷ் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க :ISRO : இஸ்ரோவின் ஆர்எல்வி சோதனை வெற்றி! உலகின் முதன் முதலாக சாதித்த இஸ்ரோ!