டெல்லி:தேசிய பங்குச் சந்தை நிர்வாக இயக்குநராக 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணிபுரிந்து வந்தார். அவர் பணிபுரிந்த காலகட்டத்தில் தேசிய பங்குச் சந்தை நிர்வாகச் செயலாக்க அலுவலராக ஆனந்த் சுப்பிரமணியனை நியமித்ததில் முறைகேடு உள்ளிட்டப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, சிபிஐ அலுவலர்கள் விசாரித்து வந்தனர்.
இதுதொடர்பாக, மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணன் வீடு உள்பட அவர் தொடர்புடைய அலுவலகங்களில் மும்பை வருமான வரி புலனாய்வு அலுவலர்கள் பிப். 17ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். இதேபோல, ஆனந்த் சுப்பிரமணியத்திற்குச் சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடந்தன.
14 நாள்கள் கேட்ட சிபிஐ
மேலும் தேசிய பங்குச் சந்தையின் ரகசியத் தகவல்களை இமயமலையில் உள்ள சாமியாரிடம் கூறியதாகப் புகார் எழுந்த நிலையில், தொடர்ந்து சிபிஐ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, பிப். 24ஆம் தேதி நள்ளிரவு சென்னையில் ஆனந்த் சுப்ரமணிம் சிபிஐ அலுவலர்களால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முன்பிணை வழங்கக் கோரி சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்ந்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு (மார்ச் 6) டெல்லியில் வைத்து சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ அலுவலர்கள் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவரை 14 நாள்கள் காவலில் எடுக்கக்கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு அளித்திருந்தது. இந்நிலையில், சிபிஐ மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட டெல்லி சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால், சித்ரா ராமகிருஷ்ணனை ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதினுடன் 50 நிமிடங்கள் உரையாடிய பிரதமர் மோடி - பேசியது என்ன?