டெல்லி: 2022ஆம் ஆண்டுக்கான "ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு" தரவரிசைப் பட்டியலை நிதி ஆயோக் (NITI Aayog) அமைப்பு நேற்று (ஜூலை 17) வெளியிட்டது. இந்த ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு என்பது, மாநிலங்களின் ஏற்றுமதித் திறன் மற்றும் செயல் திறனின் அடிப்படையில், அவற்றின் தயார் நிலையை மதிப்பிடுவதாகும். இந்த குறியீடு மாநிலத்தின் ஏற்றுமதி கொள்கை, வணிக சூழல், ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செயல் திறன் ஆகிய நான்கு முக்கிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
அந்த வகையில், கடலோர மாநிலங்கள், மலைப்பகுதி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட பிரிவுகளில், 2022ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்றுமதியைப் பொருத்தவரை மலை மாநிலங்களை விட கடலோர மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு தர வரிசையில், கடலோர மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஒட்டுமொத்த ஏற்றுமதி தயார் நிலைக் குறியீடு தரவரிசையிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 80.89 புள்ளிகளைப் பெற்று தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடலோர மாநிலங்களின் தரவரிசையில் தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஒட்டுமொத்த ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு தரவரிசையில், தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. மகாராஷ்டிரா 78.20 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கர்நாடகா 76.36 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும், குஜராத் 73.22 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும் படித்துள்ளது.