கர்நாடகா:2023 கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஆட்சியமைத்தால் 24 மணி நேரத்தில் நிறைவேற்றுவோம் என்ற முழக்கத்துடன் 5 திட்டங்களை அறிவித்திருந்தது காங்கிரஸ். இதன் படி முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த வாக்குறுதிகளுக்கு கொள்கை ரீதியிலான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டு, ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டன. செய்தியாளர் சந்திப்பில் கூறியது போல், சக்தி யோஜனா எனப்படும் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் ஜூன் 11 ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ளது.
அதன் படி நாளை(ஜூன் 11) முதல் கே.எஸ்.ஆர்.டி.சி எனப்படும் கர்நாடக சாலை போக்குவரத்து பேருந்துகள் மற்றும் பிஎம்டிசி எனப்படும் பெங்களூரு மாநகர பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் தொடங்க உள்ளது. சாலை போக்குவரத்து நிறுவனம் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இலவசப் பயணத்தைப் பெற, சக்தி ஸ்மார்ட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்குமாறு பெண்களுக்கு கர்நாடக அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. அதுவரை, இலவச பயணப் பயன் பெற விரும்பும் பெண்கள், அரசின் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அதில் அவர்களின் நிரந்தர முகவரி இடம்பெற்றிருக்க வேண்டும். ஜூன் 11 லிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு பெண்கள் சக்தி ஸ்மார்ட் கார்டை எடுத்துச் செல்வது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.