திருவனந்தபுரம்: உத்தரப்பிரதேசத்தில் தற்போது சட்டப்பேரவைத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசிய காணொலி ஒன்று வெளியாகி இருந்தது.
அந்த காணொலியில், 'உத்தரப்பிரதேச மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் செய்யும் சிறிய தவறினால் உத்தரப்பிரதேசம் இன்னொரு காஷ்மீராகவோ, இன்னொரு கேரளமாகவோ அல்லது மற்றுமொரு மேற்கு வங்காளமாகவோ மாறலாம். அக்காலம் வெகு தூரத்தில் இல்லை' எனக் கூறியிருந்தார்.
இந்தக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியது. பல்வேறு தரப்பான கருத்துகளும் விமர்சனங்களும் கூறி வந்தனர். இந்நிலையில் யோகி ஆதித்யநாத் கூறியதற்குக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துப் பதிவைப் போட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மக்களும் இந்த மாற்றத்தை விரும்புவார்கள்- பினராயி விஜயன்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'உத்தரப்பிரதேசம் கேரளாவைப் போல் மாறுமோ என யோகி அச்சமடைகிறார்.
இந்த மாற்றத்தால் உத்தரப்பிரதேசத்தில் சிறப்பான கல்வி முறையும், சுகாதாரமும், சமூக நலத் திட்டங்களும் கிடைக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். நல்லிணக்கமான எண்ணங்கள் உருவாகும். மதம் மற்றும் சாதியின் பெயரால் யாரும் கொலை செய்யப்படமாட்டார்கள். இந்த மாற்றத்தை உத்தரப்பிரதேச மக்களும் விரும்புவார்கள்' எனத் தெரிவித்தார்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீஸன்
யோகியின் கருத்துக்குக் கேரளாவின் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விடி சதீஸனும் இதற்குப் பதிலளித்துள்ளார்,
'அன்பிற்குரிய உத்தரப்பிரதேச மக்களே கேரளாவைப் போன்று வாக்களியுங்கள். பன்மைத் தன்மை மற்றும் நல்லிணக்கத்தைத் தேர்ந்தெடுங்கள். காஷ்மீர், வங்காளம் மற்றும் கேரளாவால் இந்தியா பெருமை கொள்கிறது' எனக் கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர்
இதுகுறித்து சசி தரூர் கூறியதாவது, 'உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமையாவிட்டால் அம்மாநிலம் கேரளாவாக மாறிவிடும். உத்தரப்பிரதேசம் அதிர்ஷ்டமானது. ஏனெனில் காஷ்மீரின் அழகும், மேற்கு வங்கத்தின் கலாசாரமும், கேரளத்தின் கல்வியும் கிடைத்துவிடும்' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நாடு அச்சத்திலிருந்து விடுதலை பெற வாக்களிப்பீர் - ராகுல் காந்தி