இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் திமுக அரசியல் நாடகம் நடத்துவதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறியிருக்கிறார். ஏழு பேரில், முதன் முதலில் நளினியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தவர் கலைஞர். அதுவும் மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தியே செய்தார். 2011 இல் ஆட்சிக்கு வந்தவுடன், இவர்களின் தண்டனையைக் குறைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று இதே சட்டமன்றத்தில் பேசியவர்தான் ஜெயலலிதா.
ஏழு பேரின் விடுதலையில் எவ்வித அக்கறையும் இல்லாமல், முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, இன்று வரை விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும் திறமை இல்லாமல் 10 ஆண்டுகளாக தொடர் நாடகம் போட்டு வருவது அதிமுக ஆட்சிதான். 2014 இல் இருந்து இன்று வரை இவர்களது கூட்டணிக் கட்சியான பாஜகதான் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆளுநரிடம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த தமிழக அமைச்சரவைத் தீர்மானத்திற்கு மட்டும் மத்திய அரசின் மூலம் அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெறும் தெம்பு இல்லை.
இப்போது தேர்தல் நேரம் என்பதால் மீண்டும் ஏழு பேரின் விடுதலை முதலமைச்சர் நினைவுக்கு வந்திருக்கிறது. ஏழு பேர் விடுதலை குறித்த தீர்மானத்தையே ஆளுநர், மத்திய அரசுக்கு அனுப்பி விட்ட பிறகு, ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று ஏன் நேற்று சட்டமன்றத்தில் வடிகட்டிய பொய்யை முதலமைச்சர் சொன்னார்? இப்படியொரு நாடகமாடும் முதலமைச்சர் எந்த மாநிலத்திலாவது இருக்கிறாரா?