புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து துணை நிலை ஆளுநர் புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அண்ணா சதுக்கம் அருகே நேற்று காலை முதல் தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு போராட்ட களத்தில் துணைநிலை ஆளுநருக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இரவு நேரத்திலும் அங்கேயே சாப்பிட்டு முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டார். அமைச்சர் கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் அனந்தராமன், ஜெயமூர்த்தி, ஜான்குமார், மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் அங்கேயே தார்பாய் விரித்து உறங்க தொடங்கினர். தொடர்போராட்டம் என்பதால் நிர்வாகிகள் அனைவரும் அங்கேயே தொடர்ந்து போராட்டம் நடத்தவும் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.