பெங்களூரு:கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று (ஜூலை 18) அதிகாலை 4.25 மணியளவில் காலமானார். 79 வயதான உம்மன் சாண்டி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்மயா மருத்துவமனையில் காலமானதாக அவரது மகன் சாண்டி உம்மன் தனது முகநூல் பதிவில் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, நேற்று (ஜூலை 17) பெங்களூருவில் தொடங்கிய இரண்டாவது எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து பெங்களூருவுக்குச் சென்றார். எனவே, பெங்களூருவில் வைத்து உம்மன் சாண்டியின் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார். பெங்களூருவில் எதிர்கட்சிகள் கூட்டம் இன்றும் நடைபெறுகிறது.
முன்னதாக, உம்மன் சாண்டியின் உடல் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டு, பெங்களூருவின் இந்திரா நகரில் உள்ள அவரது நண்பரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான டி. ஜானின் இல்லத்தில் அரசியல் பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இவரது உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதோடு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலும் அஞ்சலி செலுத்தினார்.
உம்மன் சாண்டி உடல் வைக்கப்பட்டுள்ள இந்திரா நகரைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்திரா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜான் வீட்டின் அருகில் உள்ள சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. அரசியல் பிரமுகர்களின் அஞ்சலிக்குப் பிறகு கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிறப்பு விமானம் மூலம் உம்மன் சாண்டியின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.
இவர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து உள்ளார். மேலும், இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்து உள்ள உம்மன் சாண்டி நிதி அமைச்சராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்து உள்ளார். மேலும், இவருக்கு மரியம்மா என்ற மனைவியும், மரியா உம்மன், சாண்டி உம்மன் மற்றும் அச்சு உம்மன் ஆகிய குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Oommen Chandy: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்