மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள கிர்கண்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், அந்தாரியில் உள்ள தங்களது பள்ளிக்கு செல்ல ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கொய்னா அணையின் நீர்த்தேக்கத்தை படகு மூலம் கடந்து, பிறகு 4 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர். குறிப்பாக அதிகளவில் மாணவிகள் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து செய்தி அண்மையில் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. பின்னர் இதுதொடர்பாக பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "முதலமைச்சர் ஷிண்டே தனது சொந்த மாவட்டமான சதாராவில் புதிதாக ஹெலிபேட்கள் கட்டுவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து நாங்கள் கூற ஒன்றுமில்லை. அதேநேரம் கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகள் தங்களது கல்விக்காக ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
முதலமைச்சர் இதையும் கவனத்தில் கொண்டு, உரிய சாலை வசதி ஏற்படுத்தி தருவதை உறுதி செய்ய வேண்டும்" என்று கருத்து தெரிவித்தனர்.
கிர்கண்டி கிராம மக்களின் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, சம்பந்தப்பட்ட துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தி, ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்த தடை - எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு