ஹைதராபாத்:தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் இன்று (மார்ச் 12) திடீர் வயிற்று வலி காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அல்சர் காரணமாக வயிற்றில் சிறிய புண் இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து ஹைதராபாத்தின் கச்சி பவுலியில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி (ஏஐஜி) மருத்துவமனை தரப்பில், "முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் உடல் நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதால், உடனடியாக எண்டோஸ்கோபி மற்றும் சிடி ஸ்கேன் உள்ளிட்ட இரைப்பை தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு அல்சர் காரணமாக வயிற்றில் சிறிய புண் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சைகளை ஏஐஜி மருத்துவமனையின் தலைவரும் மருத்துவருமான டி. நாகேஷ்வர் ரெட்டி தலைமையிலான மருத்துவ குழு செய்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை சுற்றி பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மனைவி ஷோபா மற்றும் மகள் கவிதா ஆகியோர் அவருடன் மருத்துவமனையில் உள்ளனர். இதனிடையே தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவர்கள் தொலைபேசி வாயிலாகவும், நேரில் சென்றும் நலம் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, தெலங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் ஹரிஷ் ராவ், சுற்றுலாத் துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோட், அரசு கொறடா கௌசிக் ரெட்டி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளனர்.