போபால்:மத்தியப்பிரதேசம் ஓம்காரேஷ்வரில் 108 அடி உயர ஆதி சங்கராச்சாரியாரின் சிலையான ‘ஒற்றுமையின் சிலை’யை மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று (செப்.21) திறந்து வைத்தார். 54 அடி உயர பீடத்தில், 108 அடி உயரம் கொண்ட இந்த மல்டி மெட்டல் சிற்பம் பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்திருப்பதாக கந்த்வா மாவட்ட ஆட்சியர் அனூப் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், “ஆதி குரு சங்கராச்சார்யா மகராஜ் நாட்டை, கலாச்சார ரீதியாக இணைக்க பணியாற்றினார். வேதங்களின் சாரத்தை சாமானிய மக்களிடம் பரப்புவதற்கு பாடுபட்டார். நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு மடங்களை உருவாக்கினார். இது இந்தியாவை பண்பாட்டு ரீதியாக ஒருங்கிணைக்கச் செய்தது. அதன் காரணமாகவே இந்தியா இன்று ஒன்றுபட்டுள்ளது.
அவரது பிறப்பிடம் கேரளாவாக இருந்தாலும், ஓம்காரேஷ்வரில் அவர் நிறைய கற்றுக் கொண்டார். காடுகளின் வழியாக ஆயிரத்து 600 கி.மீக்கு மேல் நடந்தார். அவர் அங்கு ஒரு குருவைக் கண்டுபிடித்தார். அங்கிருந்து அறிவைப் பெற்ற பிறகு, அவர் காசி (உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி) நோக்கிச் சென்றார். அப்போது கலாச்சார சீரழிவில் இருந்த முழு நாடும் முற்றிலும் ஒன்றுபட்டது.
ஓம்காரேஷ்வரில் சங்கராச்சாரியார் மகாராஜுக்கு அப்படிப்பட்ட குரு கிடைத்தார். அறிவு மரபு அத்தோடு முடிந்து விடக்கூடாது, வரும் தலைமுறையினரும் தொடர்ந்து அறிவைப் பெற வேண்டும். எனவே, அங்கு தெய்வீக சிலை நிறுவப்படுவது மட்டுமின்றி, அங்கு ஏகாத்மதம் அமைக்கவும் உள்ளோம். வரும் காலங்களில், நமது ஏகாத்மதம் உலகைக் காப்பாற்றும் என்பது எனது சொந்த நம்பிக்கை. எனவே, நாங்கள் இந்தத் திட்டத்தை அங்கு செய்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க:மாநிலங்களவையில் தொடரும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம்!