டெல்லி:வண்ணங்கள் ஜொலிக்க இன்று நாடு முழுவதும் ஹோலி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் நேற்று (மார்ச் 7) முதலேயே ஹோலி கொண்டாட்டத்தை தொடங்கினர். மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு, மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஹோலி கொண்டாடிய BSF வீரர்கள்!
இந்நிலையில் நேற்று (மார்ச் 7) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தான் ஹோலி கொண்டாடப் போவது இல்லை என கூறி காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நாட்டின் நிலைமையை நினைத்து தான் மிகவும் வருந்துவதாகவும், அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
பின்னர், டெல்லியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி வந்த சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா இருவரும் பிரதமரின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தான் தற்போது நாட்டின் நிலைமை மோசமானதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நல்ல முறையில் கல்வி, சுகாதாரம் போன்றவற்றை வழங்கியவர்களை கைது செய்த மோடி அரசு, அராஜகத்தில் ஈடுபட்டு கொள்ளையடிக்கும் நபர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது கவலையாக உள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் வேதனை தெரிவித்தார். இதனால் இன்று கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையை தான் கொண்டாடப் போவது இல்லை எனவும், இன்று முழுவதும் நாட்டுக்காக தனது வீட்டில் பூஜை செய்யப்போவதாகவும் தெரிவித்த அவர், நாட்டு மக்களையும் பூஜை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.