இயற்கை வழங்கிய அனைத்து சுற்றுச்சூழலையும் மனித குலம் அழித்து வருகிறது. இன்று பூமியில் காணப்படும் அனைத்து காலநிலை மாற்றங்களின் ஆணி வேர், மனிதகுலத்தின் இந்த நன்றியற்ற அணுகுமுறையில் உள்ளது. இந்தியா பல்வேறு காலநிலை மண்டலங்களைக் கொண்டுள்ளது. அதன் சாகுபடி நிலத்தில் 68 விழுக்காடு வறட்சியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், 5 கோடி ஹெக்டேர் நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.
அதிகரித்துவரும் இயற்கை பேரழிவுகளின் காரணமாக, நாட்டில் பல்வேறு சமூக-பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, காலநிலை மாற்றங்களின் தாக்கத்தால் மோசமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜார்கண்ட், மிசோரம், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம், பிகார், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை காலநிலை மாற்றங்களால் மிகவும் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் என்று அறிக்கை கூறுகிறது. பல மாநிலங்கள் நடுத்தர முதல் குறைந்த பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக உள்ளன. இயற்கை பேரழிவுகளிடமிருந்து எந்த மாநிலமும், மாவட்டமும் தப்ப முடியாது என்றாலும், மத்திய அறிக்கை சில மாநிலங்களுக்கு முன்கூட்டியே எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளது.
புயல், வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் ஆகியவற்றால் ஏற்படும் அழிவின் அடிப்படையில் தயாரிக்கப்படும் உலக காலநிலை இடர் குறியீட்டில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.
1901 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நாட்டின் சராசரி வெப்பநிலை 0.7 டிகிரி உயர்ந்துள்ளது என்று உள்நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாசு உமிழ்வுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றால், 2040 மற்றும் 2069ஆம் ஆண்டுக்கு இடையில் நாட்டில் வெப்பநிலை இரண்டு டிகிரி வரை அதிகரிக்கும். இந்தப் பின்னணியில், இயற்கை பேரழிவுகளிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் ஒரு செயல் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.