டெல்லி: இதுகுறித்து 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், "மனித வாழ்வின் வளர்ச்சிப் பயணம் நீரோடு தொடர்புடையது. சுமார் 7,500 கிலோமீட்டருக்கும் அதிகமான நீண்ட கடற்கரையினை நமது நாடு கொண்டுள்ளது. கடலோடு நம்முடைய தொடர்பு இணைபிரியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.
இந்தக் கரையோரப் பகுதிகள் பல மாநிலங்கள்-தீவுகளைக் கடந்து செல்கிறது. நாட்டின் பல்வேறு சமுதாயங்கள், பன்முகத்தன்மைகள் நிறைந்த கலாசாரங்களை இங்கே காண முடியும். ஆனால், இந்த சுவாரசியமான பக்கங்களோடு கூடவே ஒரு வருத்தமளிக்கும் பக்கமும் உண்டு. நமது இந்த கரையோரப்பகுதிகளின் சுற்றுச்சூழலோடு தொடர்புடைய பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.
காலநிலை மாற்றம், கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அபாயமாக மாறிவருகிறது. நமது கடற்கரைகளில் பரவியிருக்கும் மாசு பெரும் பிரச்னையாகி இருக்கிறது. இந்தச் சவால்கள் குறித்துத் தீவிரமான, நிரந்தரமான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அது நமது கடமை.
தேசத்தின் கரையோரப் பகுதிகளில் சுத்தம் செய்யும் ஒரு முயற்சியாக ஸ்வச்ச சாகர்-சுரக்ஷித் சாகர் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்வச்ச சாகர்-சுரக்ஷித் சாகர் என்பது தூய்மையான கடல்கள்-பாதுகாப்பான கடல்கள் என்பதாகும். ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த இயக்கம், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியான விஸ்வகர்மா ஜெயந்தி தினத்தன்று நிறைவடைந்தது. கரையோரப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் நாளும் இதே நாளன்று தான் கடைப்பிடிக்கப்படுகிறது.
சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், 75 நாட்களுக்கு நடைபெற்றது. தொடங்கிய சில காலத்திலேயே மக்களின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த முயற்சியின்படி, இரண்டரை மாதங்கள் வரை தூய்மை தொடர்பான பல செயல்திட்டங்களைக் காண முடிந்தது.
பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என 5,000 நண்பர்கள், 30 டன்களுக்கும் அதிகமான நெகிழிப் பொருட்களை அப்புறப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நான் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும்