டெல்லி:உலகலாவிய காலநிலை மாற்றத்தால் பல்வேறு சீரழிவுகள் ஏற்பட்டுவருகின்றன. கடல் மட்டம் உயர்வு, கடல் வெப்ப அலைகள் உயர்வு, கடல் அமிலமயமாதல் உள்ளிட்டவை எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடாவில் கடல் மட்டம் உயர்ந்துவருவதாக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மும்பை, சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம், மங்களூரு, திருவனந்தபுரம் நகரங்களின் கடல் மட்டம் ஆண்டுக்கு 3.3 மிமீ வேகத்தில் உயர்ந்துவருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அலைகளின் சீற்றம் அதிகமாகிவருகிறது. குறிப்பாக கடலூரில் உள்ள சுபஉப்பலவாடி, நாணமேடு கிராமங்களில் கடல் நீர் ஊருக்குள் புகும் வகையில் அலைகளின் சீற்றம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில்,மத்திய புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் வாரியத்தின் ஆய்வில், உலகலாவிய காலநிலை மாற்றத்தால் இந்தியப் பெருங்கடல், அரபிக்கடலின் வடக்குப் பகுதி மற்றும் மத்திய வங்காள விரிகுடாவில் அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய பெருங்கடல், அரபிக் கடலின் வடக்கு பகுதி மற்றும் மத்திய வங்கக் கடலில் வரும் காலங்களில் அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருக்கக் கூடும். இதன் மூலம் உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்படுவதுடன், சரியான திட்டமிடலால் கடலோர பகுதிகளில் உயிர் மற்றும் உடைமைகளில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்துவதிலிருந்து தடுக்க முடியும். பருவநிலை மாறிவரும் சூழலில், அண்மைக் காலங்களில் அடிக்கடி அலைகளின் சீற்றம் அதிகரித்து வருவது, கடலோர மக்களின் வாழ்வாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் கடல் சார்ந்த நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அலைகளின் சீற்றம், மற்றும் அதன் பாதிப்பு பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. எனவே உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கவும், கடல்சார் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த மேம்பட்ட புரிதல் அவசியமாகிறது. டெல்லி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் செயல்முறை அறிவியல் துறை, கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஹைதராபாத்தின் பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் குழு எதிர்காலத்தில் இந்திய பெருங்கடலில் அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருக்கக்கூடும் என்று கணித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ட்ரோன் மூலம் மருந்துப்பொருட்கள் டெலிவரி - டாடாவின் திட்டம் தொடக்கம்