டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருப்பவர், பிரிஜ் பூஷண் சிங். பாஜக எம்.பி.யான இவர் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். பூஷண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பூஷண் சிங் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
போலீசாருடன் மோதல்:இந்நிலையில் நேற்றிரவு (மே 3) போராட்டக் களத்துக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி சென்றார். அவர் போலீசாரின் அனுமதியின்றி படுக்கையை எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசாருக்கும், சோம்நாத் பாரதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து போலீசாருக்கும், மல்யுத்த வீரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் மல்யுத்த வீரர்கள் சிலர் காயம் அடைந்தனர். குடிபோதையில் இருந்த போலீசார் சிலர், தங்களை அடித்து இழுத்ததாக மல்யுத்த வீரர்கள் குற்றம்சாட்டினர். இதனால் போராட்டக்களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
குற்றச்சாட்டுக்கு மறுப்பு:எனினும், மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டை மறுத்துள்ள டெல்லி போலீசார், காவலர்கள் யாரும் மது அருந்தவில்லை என விளக்கம் அளித்துள்ளனர். மோதலில் போலீசார் 5 பேர் காயம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். இதற்கிடையே போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நள்ளிரவு சென்ற காங்கிரஸ் நிர்வாகி தீபிந்தர் சிங் ஹூடா கைது செய்யப்பட்டார்.