டெல்லி: இந்தியாவின் 48ஆவது தலைமை நீதிபதியாக பதவி வகித்த என்.வி.ரமணா அவரது 16 மாத கால பதவியில் இருந்து இன்று ஓய்வுபெற்றுள்ளார். அவரது அதிகாரத்தின்கீழ் நிறைவேற்றப்பட்ட பல முக்கிய தீர்ப்புகள் மூலம், ரமணா நீதித்துறை அமைப்பின் முக்கியமான வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அவரது வார்த்தைகளின் தெளிவு, பொது நலனுக்கான முன்னுரிமை ஆகியவை, கடந்த 16 மாதங்களில் அவர் வழங்கிய பெரிய மற்றும் சிறிய தீர்ப்புகள் அனைத்திலும் அவரை தனித்து நிற்க வைத்தன.
இந்தியாவின் மிக உயர்பதவிகளில் ஒன்றான உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவிற்கு பின்னர் பதவியேற்றார். இந்நிலையில் என்.வி. ரமணா ஓய்வுபெறுவதையடுத்து இன்று (ஆகஸ்ட் 26) உச்ச நீதிமன்ற வழக்கின் விசாரணை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
அதிக பெண் நீதிபதிகள் நியமனம்:ரமணா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம் (நான்கு நீதிபதிகள் கொண்ட குழு) 11 உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், 250-க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் நியமித்துள்ளது.
இந்நிலையில் ரமணா தனது பதவிக்காலத்தில் அவராகவே மொத்தம் 15 உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார். அதே நேரத்தில் பெண் நீதிபதிகளையும் அதிக அளவில் தேர்ந்தெடுத்தார். இந்தப்பெண்களில் ஒருவர் 2027ஆம் ஆண்டில் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவதற்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார்.
தலைமை நீதிபதி ரமணாவின் பல சாதனைகளில் முக்கியாமனது பொது விழிப்புணர்வுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். பொது மக்களிடமிருந்து பெற்ற கடிதங்கள் ஒவ்வொன்றிற்கும் நேரடியாகப் பதில் அளித்து பொது மக்களுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையிலான இடைவெளியைக்குறைக்க முயன்றார். நீதிபதிகளின் பதவிப் பிரமாணத்தை நேரலையாக ஒளிபரப்பும் முறையை அறிமுகப்படுத்தினார். நீதிமன்றங்களில் தினசரி விசாரணைகளை பத்திரிகையாளர்களுக்குக் கிடைக்கும் வகையில் சிறப்புச்செயலியை அமைத்தார்.
ரமணாவின் பின்னணி:நீதிபதி என்.வி. ரமணா ஆகஸ்ட் 27, 1957அன்று ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பொன்னாவரம் கிராமத்தில் நுதலபதி கணபதி ராவ் மற்றும் சரோஜினி தேவிக்கு மகனாகப் பிறந்தார். எளிமையான பின்னணியில் பிறந்து வளர்ந்த ரமணா, தனது கிராமத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளியில் படித்தார்.
பின்னர் அவர் அறிவியலில் இளங்கலைப்பட்டம் பெற்ற பிறகு நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது ரமணா மாணவராக இருந்தார். அந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ரமணா சமூக அரசியல் களத்தில் உள்ள பிரச்னைகளை முதலில் வெளிப்படையாகப்பேசினார். அவசர பிரகடன நிலையில் கைது செய்யப்பட்ட நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தனது நண்பர்களை அவர் தீவிரமாக ஆதரித்தார். சில காலம் ‘ஈநாடு’ நாளிதழில் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.