கோஹிமா:நாகாலாந்தின் மான்(Mon) மாவட்டத்தின் ஓட்டிங் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சுடுதலில் சில நாகா இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட இதுவரை 12 பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் தேசிய சோஸியலில்ட் நாகலாந்து கவுன்சில் (NSCN) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எதிர் தாக்குதலாக, பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு கிராம மக்கள் தீவைத்துள்ளனர்.
இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ, "ஓட்டிங் கிராம மக்களை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது துரதிஷ்டவசமான சம்பவம். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
துரதிர்ஷ்டவசமான சம்பவம்
இச்சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட சிறப்பு விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின்படி உரிய நீதி வழங்க வழிவகை செயப்படும். எனவே, அனைத்து தரப்பினரும் சற்று அமைதிக் காக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நாகாலாந்து சம்பவம் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாகாலாந்தின் ஓட்டிங்கில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட சிறப்பு விசாரணைக்குழு இந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெருந்தொற்று காலம் முடியவில்லை - டாடா நிறுவன இயக்குநர் எச்சரிக்கை