டெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் விநோதமான மனு ஒன்றை அளித்தார். அதில், தான் பார்க்கும் யூடியூப் வீடியோக்களில் பாலியல் ரீதியான தேவையற்ற விளம்பரங்கள் வருவதாகவும், இவை தனது கவனத்தை சிதறடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஆபாசமான விளம்பரங்கள் தனது படிப்பை பாதித்ததால், தனக்கு இழப்பீடு வழங்க யூடியூப் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. விளம்பரங்கள் பிடிக்கவில்லை என்றால், அதனைப் பார்க்காமல் இருந்து கொள்ளுங்கள், அதற்காக நீதிமன்றத்திற்கு வருவீர்களா? என்று கண்டனம் தெரிவித்தது. நேரில் ஆஜராகி இதுபோன்ற தேவையற்ற மனுவை அளித்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.