டெல்லி :இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில், கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இடைநிலைக் கல்விக்கான இந்தியச் சான்றிதழ் (ஐசிஎஸ்இ) எனப்படும் 10ஆம் வகுப்பு மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் (ஐஎஸ்சி) எனப்படும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வுகளை நடத்தியது.
இந்நிலையில், இன்று (மே. 14) தேர்வு முடிவுகளை இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) வெளியிட்டு உள்ளது. சிஐஎஸ்சிஇ இணையதளத்தின் கரியர்ஸ் பக்கத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் செயலாளர் கெர்ரி ஆர்தான் தெரிவித்தார்.
இந்நிலையில் http://cisce.org அல்லது http://results.cisce.org என்ற இணையதளத்தில் சிஐஎஸ்சிஇ பாடத் திட்டத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நடப்பாண்டில் சிஐஎஸ்சிஇ பாடத் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
12ஆம் வகுப்புகளுக்கான ஐஎஸ்சி தேர்வில் ஒட்டுமொத்தமாக 96. 93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், 10ஆம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் 98.94 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றதாகவும் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது. ஐஎஸ்சி தேர்வில் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த மாணவி மண்யா குப்தா 99.75 சதவீத மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தார்.
சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்திலும் மாணவர்களையும் காட்டிலும் மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதத்தைப் பெற்று உள்ளனர். ஒட்டுமொத்தமாக மாணவர்களை விட 6.1 சதவீதம் அதிகரித்து 90.68 சதவீதம் மாணவிகள் கூடுதலாக தேர்ச்சிப் பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பாடத்திட்டங்களுக்கு ஒரு பாடத்திற்கு வீதம் ஆயிரம் ரூபாய் செலுத்தி விடைத்தாளை மற்றும் மறுகூட்டல் செய்யலாம் என தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.
அதேநேரம் ஐஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களில் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களைக் காட்டிலும் தென்மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவியரே அதிகளவில் தேர்ச்சி பெற்று உள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது. ஐஎஸ்சி பாடத்திட்டத்தில் தென்மாநிலங்களில் 99.69 சதவீத தேர்ச்சி விகிதமும் ஐஎசிஎஸ்இ பாடத் திட்டத்தில் தென் மாநிலங்களில் 99.20 சதவீத தேர்ச்சி விகிதமும் மாணவர்கள் பெற்று உள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க :Karnataka CM : கர்நாடக முதலமைச்சர் யார்? மல்லிகார்ஜூன கார்கேவிடம் பொறுப்பு ஒப்படைப்பு!