அம்ரோகா : உத்தர பிரதேசத்தில் திரையரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. உத்தர பிரதேச மாநிலம் கோத்வாலி அம்ரோகாவில் மாதவ் திரையரங்கம் புனரமைப்பு பணிகள் கடந்த இரண்டு மதங்களுக்கு முன் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திரையரங்கின் பால்கனி உள்ளிட்ட பகுதிகள் புனரமைக்கப்பட்ட நிலையில், இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திரையரங்கின் கட்டுமானங்கள் இடிந்து தரைமட்டமானது. சம்பவத்தின் போது ஏறத்தாழ 9 ஊழியர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கட்டட விபத்தில் சிக்கிய இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மீதம் உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ஈடுபடுமாறும் மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இருவர், யாசின் மற்றும் ரபிக் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் இதில் யாசின் 19 வயதே ஆன இளைஞர் என தெரிய வந்து உள்ளதாகவும் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கட்டட இடிபாடுக்கு காரணம் என்னவென்று தெரியவராத நிலையில், இது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்து உடனடியாக சென்ற மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் தியாகி, கட்டட இடிபாடுக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், அலட்சியத்தால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருந்தது தெரியவந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கட்டுமான பணியில் இருந்த திரையரங்கம் வெடிகுண்டு வைத்து தகர்த்தது போல் இடிந்து தரைமட்டமாக கிடப்பதை அக்கம் பக்கத்து பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர். மேலும், ஈடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மற்ற தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க :பாஸ்டேக்கில் பிரச்சினை.. டோல்கேட் சூறையாடல்.. மகாராஷ்டிர நவநிர்மன் சேனா தொண்டர்கள் அட்டூழியம்?