ஹைதரபாத்:இந்தியாவின் சந்திராயன்-3 வெற்றிகரமாக நிலவில் தென் துருவத்தில் கால் தடத்தை பதித்தது நாட்டு மக்கள் அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்தியாவின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை மக்கள் பல விதமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலர் தங்களது மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், அமேரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியக்கும் படி இந்தியா மாபெரும் சாதனை படைத்துள்ளதாகவும், இந்த சாதனைக்காக உழைத்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மோகன் லால்:மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன் லால், தனது ட்விட்டர் பக்கத்தில் நிலவில் தென் துருவத்தில் தரையிரங்கி சாதனை படத்த சந்திராயன்-3 வெற்றி நாட்டு மக்களை அனைவரையும் பெருமை அடைய செய்துள்ளதாக பதிவிட்டு, இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, இந்தியா வரலாற்று சாதனை படைத்தது பல கோடி இந்தியர்களுக்கு பெருமையாக இருப்பதாகவும், தானும் அனைவரோடு இணைந்து சந்திராயன்-3 வெற்றியை கொண்டாடுவதாக பதிவிட்டுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ்:நடிகர் பிரகாஷ் ராஜ் இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் இது ஒரு புகழுக்குரிய சந்தர்ப்பம் என்றும், சந்திராயன்-3 வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இஸ்ரோவில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.