தெலுங்கு திரைப்பட உலகின் பழம்பெரும் பிரபல இயக்குநரான கே. விஸ்வநாத்(92) உடல் நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கலையின் அழியாத் தன்மையையும், வாழ்வின் நிலையற்ற தன்மையையும் நன்கு அறிந்தவர் கலாதபஸ்வி விஸ்வநாத். அவரது கலை அவரது வாழ்நாளைக் கடந்தும் கொண்டாடப்படும். வாழ்க அவரது கலை. உங்களின் தீவிர ரசிகன். கமல்ஹாசன்” என தெரிவித்துள்ளார். இதே போல் பாலிவுட் நடிகர் அனில் கபூர் தனது இரங்கல் செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “நீங்கள் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்துள்ளீர்கள், உங்களுடன் செட்டில் இருப்பது கோயிலில் இருப்பது போல் இருக்கும்” என தெரிவித்துள்ளார். இதே போல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் இவரது இறப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “விஸ்வநாத் அவர்களின் இறப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இவரது இழப்பு இந்திய/ தெலுங்கு சினிமாவில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது” என தெரிவித்துள்ளார்.
இதே போல் இயக்குநர் விஸ்வநாத்தி மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த மலையாள நடிகர் மம்முட்டி, “விஸ்வநாத் அவர்களின் இறப்பு செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். சுவாதி கிரணத்தில் அவர் இயக்கத்தில் நடிக்கும் பாக்கியம் கிடைத்தது. அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது பிரார்த்தனைகள்” என தெரிவித்துள்ளார்.