லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 4 வயது சிறுவன், குடும்பத்தினருடன் கட்டானா சாஹிப் பகுதிக்கு காரில் சென்றுள்ளான். காரின் ஜன்னல் வெளியே வானில் பறந்து கொண்டு இருந்த பட்டத்தை சிறுவன் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்த நேரத்தில், திடீரென மாஞ்சா நூல் சிறுவனின் முகத்தில் கோரமாக வெட்டியது. ரத்த கொட்டிய நிலையில் வலி தாங்க முடியாமல் சிறுவன் துடிதுடித்துள்ளான்.
அருகில் இருந்த மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், சிறுவன் முகத்தில் 120 தையல் போட்டு உயிரைக் காப்பாற்றினர். மோசமான நிலையில் சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், உடனடி அறுவை சிகிச்சை மூலம் உயிரைக் காப்பாற்றியதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் குஜராத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பட்டத்தின் மாஞ்சா நூல் அறுத்ததில் 3 வயது சிறுமி மற்றும் 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்ததாகவும், மற்றொரு சம்பவத்தில் மாஞ்சா நூல் அறுத்த பெண்மணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சீன மாஞ்சா நூலுக்கு பஞ்சாப் அரசு கடந்த வாரம் தடை விதித்த நிலையில் கள்ள சந்தை மூலம் மாஞ்சால் நூல்களை பெற்று சிலர் இது போன்ற உயிரிழப்புகளுக்கு காரணமாவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 60க்கும் மேற்பட்டோர் பட்டத்தின் மாஞ்சா நூல் அறுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:92 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை.. லிஃப்ட் கொடுப்பதாக அழைத்துச் சென்று கொடூரம்