இந்தியாவின் அருணாச்சலப்பிரதேச எல்லை - சீன நாட்டின் எல்லைப் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மாசோ கேம்ப் என்ற பகுதியில், சீனா ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.
அவை மக்கள் குடியிருக்கும் வீடுகள் இல்லை, ராணுவப் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் கூறியது. இருந்தபோதும், அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில், சீனா தொடர்ந்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள தனது எல்லைப்பகுதிகளில், சீனா ஆப்டிகல் ஃபைபர் கேபிளை அமைத்து 5ஜி சேவையை வழங்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேவை இந்திய பகுதிகளுக்குள்ளும் கிடைப்பதாக கூறப்படுகிறது.